சுதந்திர கிண்ண முக்கோண டுவன்ரி20 போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

70

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் பங்கேற்கும் நிதாஹாஸ் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர், கொழும்பு ஆர் பிரேமதாஸ அரங்கில் இன்றிரவு இலங்கை, இந்திய அணிகள் மோதுவதுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாஸ அரங்கிலேயே இடம்பெறவுள்ள நிலையில், ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் தலா இரண்டு முறை மோதவுள்ளதுடன், அதன் முடிவில் கூடிய புள்ளிகளைப் பெறும் இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவுள்ளன.

இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இந்தியா மூன்றாமிடத்திலிருப்பதுடன், இலங்கை எட்டாமிடத்திலும் பங்களாதேஷ் பத்தாமிடத்திலும் காணப்படுகின்றன.

அந்தவகையில், இத்தொடரில் எவ்வகையான முன்னேற்றகரமான முடிவுகளைப் பெற்றாலும் அந்தந்த இடங்களிலேயே மூன்று அணிகளும் தரவரிசையில் நீடிக்கவுள்ளதுடன், இலங்கை நான்கு போட்டிகளிலும் தோற்றால் ஒன்பதாமிடத்துக்கு கீழிறங்கும் சந்தர்ப்பமும் இந்தியா மூன்று போட்டிகளில் தோற்றால் ஐந்தாமிடத்துக்கும் நான்கு போட்டிகளிலும் தோற்றால் ஆறாமிடத்துக்கும் கீழிறங்கும் சந்தர்ப்பம் காணப்படுகிறது.

சந்திக ஹத்துருசிங்க தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் இலங்கை, தமது வழமையான அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தவிர்ந்த பலமான அணியுடனே இத்தொடரில் களமிறங்குகிறது. பங்களாதேஷுக்கான சுற்றுப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்த நிலையில், இந்தியா பங்கேற்கும் இத்தொடர் இலங்கையணிக்கு சவால் மிக்கதாக அமையலாம்.

இந்திய அணி, தமது அணித்தலைவர் விராத் கோலி, விக்கெட் காப்பாளர் மகேந்திர சிங் டோணி, சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியா, சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமார் ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து விட்டு றிஷப் பண்ட், வொஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளித்து இத்தொடரில் களமிறங்கினாலும் பலமானதாகவே காணப்படுகிறது.

அடுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மேம்பட்ட அணியாக முன்னேறினாலும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படி பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத பங்களாதேஷ் அணி, அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸனை காயம் காரணமாக இழந்துள்ள நிலையில், பதில் தலைவர் மகமதுல்லா மற்றும் முஷ்பிக்கூர் ரஹீம், தமிம் இக்பால் ஆகியோரை நம்பி இத்தொடரில் களமிறங்குகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...