Take a fresh look at your lifestyle.

கொடூர குற்றவாளிகளின் பதுங்கு குகைகள் மற்றும் கொலைக்களங்கள்

சர்வதேசத்தை உலுக்கிய மாபெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாப்பாக பதுங்கியிருந்த மறைவிடங்கள் மற்றும் குற்றச் செயல்கள் இடம்பெற்ற இடங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. பாதுகாப்பு இரகசியத்தன்மையையும் முதன்மையாகக் கொண்டு இத்தகைய உலகக் குற்றவாளிகள் சிலர் பதுங்கியிருக்கத் தெரிவு செய்த இடங்கள் பற்றியும், உலக வரலாற்றில் மிக மோசமான குற்றச் செயல்கள் இடம்பெற்ற சில கொலைக் களங்கள் பற்றியும் எப்.எம் தமிழ் இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

பின் லேடனின் வீடு

அல் கய்தா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின் லேடன் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதி குகையொன்றில் மறைந்திருப்பதாக அமெரிக்க துருப்பினர் திடமாக நம்பினர். எவ்வாறெனினும் இந்த நம்பிக்கைகளை தகர்த்து எறியும் வகையில் எவரும் எதிர்பார்க்காத வண்ணம் பாகிஸ்தானின் இராணுவப் பயிற்சி மையத்திற்கு ஒரு கிலோ மீற்றர் தொலைவில உள்ள வீடொன்றில் பின் லேடன் பதுங்கியிருந்தார். பாகிஸ்தானின் அபோடாபாட் நகரில் 10-18 அடி உயரமான மதில் சுவர்களைக் கொண்ட மூன்று மாடி வீட்டின் மேல் மாடிகளில் பின் லேடன் தங்கியிருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த வீட்டில் இணைய மற்றும் தொலைபேசி வசதிகள் இருக்கவில்லை. எனினும் கணனி வசதிகள் காணப்பட்டன.

ஜெப்ரி டஹாம்மர் வீடு


மிக மோசமான தொடர் கொலைக் குற்றவாளி ஜெப்ரி டஹாம்மர் பதுங்கு குழியிலோ அல்லது இரகசிய அறையிலோ வசிக்கவில்லை. சன நெரிசல் மிக்க ஒக்ஸ்பொர்ட் தொடர்மாடிக் கட்டடத்தின் ஒரு படுக்கையறையைக் கொண்ட வீடொன்றில் வாழ்ந்து வந்தார். 1991ம் ஆண்டு, 213 இலக்க வீட்டில் வைத்து டஹாம்மரை காவல்துறையினர் கைது செய்தனர். டஹாம்மார் மிகவும் கொடூரமான முறையில் 17 இளைஞர்களை படுகொலை செய்திருந்தார். படுகொலைகள் தொடர்பான புகைப்படங்கள் மட்டுமன்றி கொலையுண்டவர்களின் உடற்பாகங்களையும் டஹாம்மர் பேணி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1994ம் சக கைதி ஒருவரினால் டஹாம்மர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததன் பின்னர் ஒக்ஸ்போர்ட் தொடர்மாடிக் கட்டடம் இடித்து அழிக்கப்பட்டது.

மான்சனின் பண்ணை வீடு


சார்ல்ஸ் மான்சான் பண்ணை வீடொன்றில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டார். மான்சனும் அவரது சகாக்காளும் மாபெரும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டனர். 1968ம் ஆண்டு 80 வயதான பண்ணையாளர் ஜோர்ஜ் ஸ்பானின் பண்ணை வீட்டை மான்சனும் அவரது சகாக்களும் பரிமாற்று அடிப்படையில் பெற்றுக்கொண்டனர். பிரான்ஸின் பிரபல திரைப்பட இயக்குனர் ரோமன் ப்லன்ஸ்கீயின் மனைவியும் நடிகையுமான சரோன் டேட் உள்ளிட்ட ஏழு பெண்கள் இரண்டு தினங்களுக்குள் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணியான சரோன் டேட் 16 தடவைகள் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மான்சன் மற்றும் அவரது மூன்று சகாக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. (கலிபோர்னியாவில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.)

எச்.எச்.ஹோல்ம்ஸ் கொலைக் கோட்டை


அமெரிக்காவின் முதல் தொடர் கொலைக் குற்றவாளியாக எச்.எச். ஹோல்ம்ஸ் வரலாற்றில் பதிவாகியுள்ளார். 1886ம் இந்த கொலைக் குற்றச் செயல்கள் இடம்பெற்றன. சிக்காகோ மருந்தகமொன்றிலேயே இந்த பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற்றன. புற்று நோயாளி ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த மருந்துக் களஞ்சியத்தை ஹோல்ம்ஸ் ஹோட்டலாக உருமாற்றினார். இந்த ஹோட்டல் விசேடமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1893ம் ஆண்டு அங்குரார்பணம் செய்யப்பட்ட இந்த ஹோட்டலின் பல அறைகள் படுகொலைகளை இலகுவில் மேற்கொள்ளக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஹோல்ம்ஸ் 27 பேரைக் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. படுகொலைகளுடன் தொடர்புடைய ஹோல்ம்ஸ் இறுதியில் தூக்கில் இடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இளம் யுவதிகளே அதிகளவில் கொல்லப்பட்டிருந்தனர். இந்த ஹோட்டலின் முதல் மாடி மருந்துக் களஞ்சியச் சாலையாக காணப்பட்டது. ஹோட்டலில் நடைபெறும் கொடூரங்களை அறியாமலேயே மக்கள் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து வந்தனர்.

டெட் கசின்ஸ்கீயின் சிறுகுடில்


பல ஆண்டுகளாக தபால் குண்டுகளின் மூலம் அமெரிக்காவை உலுக்கிய டெட் கசின்ஸ்கீ சிறு குடில் ஒன்றிலேயே வாழ்ந்து வந்தார். லின்கோனுக்கு அருகாமையில் உள்ள 10 தர 12 அடி குடிலில் கசின்ஸ்கீ பதுங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொண்டார். புத்தகங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களை அவரது இந்த சிறு குடிலிலிருந்து காவல்துறையினர் மீட்டனர். 1996ம் ஆண்டு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படும் வரையில் கசின்ஸ்கீ இந்த அறையில் மிகப் பாதுகாப்பாக மறைந்திருந்தார். அறையில் காணப்பட்ட பொருட்கள் அழிக்கப்படவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் இந்தப் பொருட்கள் வொஷிங்டன் நூதனசாலையில் காட்சிப்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

ஜோசப் பிரிட்ஸிலின் சிறைக்கூடம்

ஜோசப் ரிட்ஸிலின் தனது சொந்த மகளை நீண்ட காலமாக வீட்டின் ஒர் பகுதியிலேயே தடுத்து வைத்திருந்தார். ஒஸ்ட்ரியாவின் அம்ஸ்டாட்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. 73 வயதான ஜோசப் தனது இள வயது மகளை இவ்வாறு சிறைபிடித்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். மனைவி ரோஸ் மேரியிடம் மகள் எலிசபத் ஆண் நண்பருடன் சென்றுவிட்டதாக மிக நீண்ட காலமாக ஏமாற்றியுள்ளார். மகள் எலிசபத்தை கட்டாயப்படுத்தி கடிதங்களை எழுத வைத்து தாய் ரோஸ் மேரியை நம்ப வைத்தார். ஜோசப் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளினால் மகள் எலிசபத் ஏழு பிள்ளைகளுக்கு தயானார். இதில் ஒரு குழந்தை பிறந்த உடனேய இறந்து விட்டது. மூன்று குழந்தைகளை அநாதைகள் என்ற போர்வையில் மனைவிடம் கொடுத்து வளர்த்து வந்த ஜோசப்பின் குற்றச் செயல்கள் 2008ம் ஆண்டு அம்பலமானது. எலிசபத்தின் 19 வயது மகள் கேர்ஸ்டன் சுகவீனமுற்றதன் காரணமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது இந்த குற்றச் செயல்கள் குறித்த திடுக்கிடும் உண்மை உலகை பெரும் அதிர்ச்சியடையச் செய்தது. மிகக் கொடூரமான பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட ஜோசப்பிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜொன்;ஸ்டவுன்

1978ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி கயானாவின் தேவாலயமொன்றான ஜொன்ஸ்டவுனில் 900 பேர் உயிரிழந்தனர். இந்த தேவாலயத்தின் நிறுவனர் ஜிம் ஜோன்ஸே இந்தக் குற்றச் செயல்களுக்கு பொறுப்புதாரி என கண்டுபிக்கப்பட்டது. பக்தர்களை தற்கொலை செய்து கொள்ளவும், படுகொலை செய்யவும் இந்த மதகுரு தூண்டிhர். உலகின் மிக மோசமான கொலைக் குற்றச் செயல் இடம்பெற்ற மதத் தளங்களில் ஒன்றாக ஜொன்;ஸ்டவுன் கருதப்படுகின்றது.

சதாம் ஹ_செய்னின் சிலந்த வளை


ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹ_செய்ன் பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் மிகப் பாதுகாப்பான ஓர் இடத்தில் பதுங்கியிருந்தார். பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் எட்டு மாதங்கள் குறித்த இடத்தில் பாதுகாப்பாக மறைந்திருந்தார். ரிக்ரிட் நகருக்கு அருகாமையில் உள்ள அட் டாவார் என்ற இடத்தில் சதாம் ஹ_செய்ன் மறைந்திருந்தார். 8 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட பதுங்கு குழியில் சதாம் ஹ_செய்ன் பதுங்கியிருந்தார். இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், 750000 அமெரிக்க டொலர் பணம் போன்றன இந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டது.
அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பின்னர் சதாம் ஹ_செய்னின் மறைவிடம் கண்டு பிடிக்கப்பட்டது. 23 ஆண்டு கால ஆட்சியில் மனிதாபிமான விரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக சதாம் ஹ_செய்னுக்கு 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எலிசபெத் பாத்தோரியின் கோட்டை

கன்னிப் பெண்களை அகோரமான முறையில் படுகொலை செய்த எலிசபெத் பாத்தோரி வாழ்ந்த செச்டிஸ் கோட்டை வரலாற்றில் மற்றுமொரு மோசமான குற்றவாளிகள் பதுங்கு குகையாகக் கருதப்படுகின்றது. தனது மேனி எழிலை பாதுகாக்கும் நோக்கில் இளம் கன்னிகளின் இரத்தத்தில் நீராடியதாக கூறப்படுகிறது. ஹங்கேரிய இராஜகுடும்ப பெண்ணான எலிசபெத் பணிப்பெண்கள் உள்ளிட்ட இளம் யுவதிகள் பலரை இவ்வாறு படுகொலை செய்துள்ளார். 1600களில் இந்த கொடூரச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்தக் குற்றச் செயல்களுக்காக எலிசபத்திற்கு தண்டனை விதிக்கப்படவில்லை. இறுதியில் சீமாட்டி எலிசபத் செச்டிஸ் கோட்டையிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் அவர் உயிரிழந்தார்.

இந்த ஆக்கம் எப்.எம். தமிழ் இணைய தளத்திற்காக எழுதப்பட்டது, எப்.எம். தமிழுக்கே இந்த கட்டுரை தொடர்பான காப்புரிமை காணப்படுகின்றது, மீள் பிரசூரம் செய்வோர் எப்.எம். தமிழை மேற்கொள்காட்டி பிரசூரிக்க முடியும்.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...