டிவில்லியர்சுடன் இணைந்தாடுவது மகிழ்ச்சியானது

23

தென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்சுடன் இணைந்து பேட் செய்வதை எப்போதும் விரும்புவதாகவும் அவருடன் ஆடுவது எனக்கு கிடைத்த கவுரவம் எனவும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. ரிஷாப் பான்ட் 61 ரன்களும், அபிஷேக் ஷர்மா 46 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி (70 ரன், 40 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), டிவில்லியர்ஸ் (72 ரன், 37 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர், நாட்-அவுட்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 19-வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இறுதிகட்டத்தில் நாங்கள் பந்து வீசிய விதம் திருப்தி அளிக்கவில்லை. ஆட்டத்தின் இடைவேளையின் போது டிவில்லியர்ஸ் என்னிடம், ‘கவலைப்படாதீர்கள் கோலி, நாம் இலக்கை அடைந்து விடுவோம்’ என்று கூறினார். அவரது வார்த்தை எனக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

டிவில்லியர்சுடன் இணைந்து பேட் செய்வதை எப்போதும் விரும்புகிறேன். இருவரும் இணைந்து பல முறை நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்திருக்கிறோம். அவருடன் ஆடுவது எனக்கு கிடைத்த கவுரவமாகும். ரன்ரேட்டை அதிகப்படுத்தி கொள்ள 3 ஓவர் மிச்சம் வைத்து வெற்றி பெற விரும்பினோம். அது நடக்காவிட்டாலும் 2 புள்ளி பெற்றது முக்கியமானது’ என்றார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...