ஜெமினி கணேசனை இழிவு படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு

41

நடிகையர் திலகம் படத்தில் பிரபல பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனை இழிவு படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சாவித்ரி மது குடிக்க, ஜெமினி கணேசன் தான் காரணம் என தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், துல்கரின் கதாபாத்திரங்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன.

இதில் நடிகர் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாவித்ரிக்கு ஜெமினி கணேசன் திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது, இதனால் இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்படுவது, ஒரு கட்டத்தில் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்று காட்சிகளை வைத்துள்ளனர்.

அதன்பிறகு சாவித்ரி மதுவுக்கு அடிமையாகி பாட்டில் பாட்டிலாக குடிப்பது மாதிரியும், இதனால் சர்க்கரை நோய்க்கு ஆளாகி கோமாவில் சிக்கி இறப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.

இந்த படத்தை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பார்த்து பாராட்டி இருக்கிறார். ஆனால் ஜெமினி கணேசனின் முதல் மனைவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெமினி கணேசனை மோசமானவராக சித்தரித்து இருப்பதாக அவர்கள் சாடினர்.

ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது, “சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன். அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்” என்று தெரிவித்து உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இது சர்ச்சையாக பரவி வருகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...