அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய சீன ஹெக்கர்கள்

35

கடலுக்கு அடியில் போர் புரிதல் தொடர்பான, அதி முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான தகவல்களை, சீன அரசை சேர்ந்த, ‘ஹேக்கர்’ எனப்படும், இணையதள தகவல் திருடர்கள், அமெரிக்க கடற்படை ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து திருடியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க கடற்படை ஒப்பந்ததாரர் ஒருவரின் கம்ப்யூட்டர்களில் இருந்து, சீன அரசுடன் தொடர்புடைய, ‘ஹேக்கர்கள்’ முக்கியமான தகவல்களை திருடியுள்ளனர். இந்தாண்டு, ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் நடந்த, இந்த இணையதள தகவல் திருட்டுகளின் மூலம், 614 ஜிகாபைட் திறன் தகவல்கள் பறிபோயுள்ளன.இந்த தகவல்கள் அனைத்தும், கடலுக்கு அடியில் போர் புரிதல் தொடர்பான ரகசியங்கள். அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தும், ‘சூப்பர்சோனிக்’ ஏவுகணை எதிர்ப்பு தொழில் நுட்பத்தை தயாரிக்கும் ரகசிய திட்டங்கள் ஆகியவை, திருடுபோன தகவல்களில் முக்கியமானவை.தவிர, ‘ஸீ டிராகன்’ எனப்படும், ரகசிய திட்டம், நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும், ரேடியோ அறை திட்டம் தொடர்பான தகவல்களும் திருடுபோயுள்ளன.

ராணுவ தொழில் நுட்பத்தில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. இந்த நிலையை மாற்றவும், கிழக்காசியாவில், பெரிய சக்தியாக உருவெடுக்கவும், சீனா, நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் ராணுவ தகவல்களை, ஹேக்கர்கள் மூலம் சீனா திருடி வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...